குருந்தடி ஸ்ரீஇராஜஇராஜேஸ்வரி அம்பாள் துணை
தெல்லிப்பழை கிழக்கு குருந்தடி இராஜஇராஜேஸ்வரி அம்பாள் ஆலயம் என அழைக்கப்பட்ட வீமன்காமம் வடக்கு ஸ்ரீ இராஜஇராஜேஸ்வரி அம்பாள் ஆலய வரலாறு.
வள்ளுவன் தன்னை உலகினிற்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாட்டின் தலைநகராம் சென்னை மாநகரில் சைவமும் தமிழும் தழைத்தோங்க நின்ற மயிலாப்பூர் என்னும் திருமயிலைப் பதி அமைந்துள்ளது. இங்கு தான் உலகம் போற்றும் அறநூலாம் திருக்குறளை உலகிற்கு தந்த தெய்வப்புலவன் வள்ளுவப் பெருந்தகை அவதரித்தார்.
இத்தகைய சிறப்புடைய திருமயிலையில் எழுந்தருளி உள்ள கற்பகம்பாள் சமேத கபலீஸ்வரர் ஆலயம் மிகவூம் பிரசித்தி பெற்றது. இது சென்னை மாநகருக்கு பெருமை சேர்ப்பது. கற்பகவல்லியின் பொற்பதம்பற்றி நற்கதி அடைந்தோர் பலர். திருஞானசம்பந்தர் எலும்பை பெண்ணாக்கிய (பூம்பாவை) அற்புதம் நிகழ்த்திய திருத்தலமும் அதுவேதான். வாயிலார் நாயனார் பிறந்து வாழ்ந்து அருட்பேறு பெற்றதும் இத் திருமயிலையில்தான். இப்படியாக அத்திருதலத்தின் பெருமையை சொல்லிக் கொண்டே போகலாம்.
நிற்க அத்திருதலத்திற்கு “மயிலாப்பூர்” என பெயர் வந்த காரணத்தைச் சிறிது ஆராய்வோம். அதற்கு மூன்று வேறுபட்ட புராணக்கதைகள் கூறப்பட்ட போதிலும், அவை அனைத்தும் மயிலுடன் தொடர்புடையவை. அவற்றுள் ஒன்றை மட்டும் கவனிப்போம். அதனை மிக சுருக்கமாகச் சொன்னால் “உமை அம்மை மயிலாக வந்து சிவனை வணங்கி உய்ந்தமையாகும்”.
இதனை அமிர்தலிங்கதம்பிரான் திருமயிலைத் தல புராணத்தில் பின்வருமாறு கூறுகிறார்.
“புன்னாக வனத்து எழில்சேர் கயிலைமலையூமை
மயிலாய் பூசை செய்யூ
நன்னாமத்தான் மயிலையென விளங்கு மூதூர்”
புன்னை மரக்காட்டில் கயிலைமலையில் இருக்கும் உமை மயிலாக வந்து பூசை செய்து வழிபட்டமையால் மயிலை என பெயர் விளங்குகிறது என்பதாகும். (நூல் ஆதாரம்: திருமயிலை அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் வரலாறு – பக்கம் - 10,11,84,85,86,87)
மேலும் அத்திருதலத்தின் தெற்கு மாட வீதியில் ஒரு திருத்தலம் அமைந்துள்ளது. அது “வெள்ளியங்கிரீஸ்வரர்” ஆலயம். அது வெள்ளி (சுக்கிரன்) இலிங்கம் அமைத்து வழிபட்ட கோவிலென சுக்கிரன் அருச்சனை படலத்தில் கூறப்படுகிறது. (பக்கம் - 88)
இவ் ஆலயத்தின் தலவிருட்சம் “குருந்தமரம்”.
நிற்க இங்கேதான் எமது கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் “ஸ்ரீ குருந்தடி இராஜஇராஜேஸ்வரி அம்பாள்” ஆலய வரலாறும் கிராமத்தின் வரலாறும் தொடங்குகின்றது.
ஆலயத்தின் தோற்றமும் கிராமத்தின் தோற்றமும்
இவ் ஆலயம் ஏனைய ஆலயங்களைப் போல அக்கிராமத்தில் குடி இருப்பவர்களால் பிற்காலத்தில் கட்டப்பட்டதல்ல. இக்கிராமத்தில் மக்கள் குடியேற வரும் போதே ஒரு கையில் “கண்ணகை அம்மன்” சிலையையும் மறுகையில் “குருந்த மரம்” ஒன்றையும் கொண்டுவந்து வைத்து பூசித்தனர் என வரலாறு உண்டு.ஆரம்ப காலத்தில் அது கண்ணகை அம்பாள் ஆலயமாகவே விளங்கியது என்பது யாவரும் அறிந்த ஒன்று. கண்ணகை வழிபாடு மற்றும் சீதை, திரௌபதை, நாச்சியார் ஆகிய தெய்வீகப் பெண்களை வணங்கிய முறை ஈழம் எங்கும் காணப்படுகிறது. ஆரியரின் பண்பாடும், ஆதிக்கமும் திராவிட வழிபாட்டுமுறையில் ஊடுருவ முன்னர் ஈழத்தில் ஆன்மார்த்த வழிபாடு மிகவும் பிரபல்யம் பெற்றிருந்தது. அதாவது தாமே விளக்கேற்றி பொங்கலிட்டு படைத்து வழிபடும் முறையே காணப்பட்டது.
ஈழத்திலே கண்ணகி வழிபாடு கி.பி. 2ம் நூற்றண்டில் இலங்கையை ஆட்சி செய்த கயவாகு மன்னனால் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது. இதனை ஈழத்து வரலாற்று நூல்களான இராஜவலியூம், இராஜரத்னகரவும், கஜபாகத்தாவ என்னும் பத்தினி வரலாறு கூறும் சிங்கள நூலும் குறிப்பிட்டுள்ளன. “பத்தினி தெய்யோ” என சிங்கள மக்களும் வணங்கும் கண்ணகி வழிபாட்டை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரும் அவரது சகாக்களும் எதிர்த்தனர். இதனால் கண்ணகி கோயில்களை நாகேஸ்வரி, நாகபூசணி, இராஜஇராஜேஸ்வரி கோயில்களாக மாற்றினர் எனினும் ஈழத்திலே கண்ணகி வழிபாடு அழியாத ஒரு வழிபாடாக வளர்ச்சி பெற்றுள்ளது.
கி.பி. 1900 இன் பிற்பாடே மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் கோவிலிலும் அதன் நிர்வாகத்தினர் ஏனைய சுவாமிகளுக்கு பூசை செய்வதற்கு ஏற்படுத்திய பிராமணரே கண்ணகை அம்மனுக்கும் பூசை செய்ய வேண்டும் என்ற விதிமுறையை ஏற்படுத்தினர். (நூல் ஆதாரம்: ஈழத்து திருக்கோயில்கள் வரலாறும் மரபும் - திருமதி.வசந்தா நடராஜன் B.A வற்றாப்பளை கண்ணகை அம்மன் பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் ஆகிய கட்டுரைகள்)
புத்தளம மாவட்டத்தில் “திரௌபதை அம்மன்” என்ற பிரபலமான கோவில் இருக்கின்றது. அதுவும் திரௌபதையு டன் தொடர்பு படுத்தி “பார்த்தசாரதி” கோவிலாக பெயர் மாற்றப்பட்டுள்ளது.
மேலே எமது கிராமிய வழிபாட்டுமுறையில் ஆரியர் வருகை ஏற்படுத்திய தாக்கத்தை பார்த்தோம் அதற்கு ஈழத்திலே இருந்த சில சமய பெரியார்களும் துணை போனதையு ம் பார்த்தோம் இருப்பினும் கண்ணகி வழிபாடு இன்றும் நிலவுகிறது.
மயிலாப்பூர் மரபில் வந்த வீமன்காமம் வடக்கு மக்கள் காலம் காலமாக கற்புத் தெய்வம் கண்ணகி அம்மனையே வழிபட்டு வந்தனர். 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கு ஏற்பட்ட காலரா என்ற பெரும் தொற்று நோயால் சுமார் 60 இற்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். கண்ணகையையே காவல் தெய்வமாக நம்பி வழிபட்ட மக்கள் இத்தகைய பேரழிவை கண்ணகை அம்மன் தடுத்து நிறுத்தாது கண்டு மிகவூம் மனம் நொந்தனர். அம்பாள் அடியார் ஒருவர் மிகவூம் விரக்தியடைந்து “நீயும் பார்த்துக் கொண்டு இருக்கவா, இவ்வளவு கொடுமையும் எற்படுகிறது?” என்று கண்ணகை அம்பாளை திட்டி பாராமுகம் காட்டிய குற்றத்திற்காக ஒலையால் வேயப்பட்டிருந்த கோவிலை தீயிட்டு கொளுத்தினார். இது நிகழ்ந்தது 1870ம் ஆண்டளவில் ஆகும்.
இச்சம்பவத்தின் பின்னர் எமது ஊரைச் சேர்ந்த நெடுவல் மூத்ததார் என அழைக்கப்பட்ட ஆறுமுகம் அப்புக்குட்டி என்பவர் தமது முன்னோர் செய்த தவறுக்கு பிராயசித்தம் தேடுமுகமாகவும் எமது கிராம மக்களின் குறையை தீர்க்கும் முகமாகவும் ஆலயத்தை மீண்டும் கட்டுவதற்கான திட்டத்தை எமது கிராம மக்களுடன் சேர்ந்து மேற்கொண்டார். அக்காலத்தில் மயிலிட்டி கிராமசபை அங்கத்தவராக விளங்கிய அவர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின்பால் கொண்ட மதிப்பால் மேலே குறிப்பிடப்பட்ட அவரின் போதனைகளால் உந்தப்பட்டு முன்னர் கண்ணகை அம்பாள் இருந்த அதே இடத்தில் இராஜஇராஜேஸ்வரி அம்பாளை சீமெந்துக் கட்டிடம் ஒன்றை அமைத்து பிரதிஸ்டை செய்தார்.
இருப்பினும் அவருடைய உறவினராயினும் கருத்து வேறுபாடு கொண்ட கட்டை மூத்தார் என அழைக்கப்பட்ட கந்தப்பிள்ளை மூத்ததம்பி என்பவர் மாறுபட்டு செயற்பட்டார். அவர் மீண்டும் கண்ணகை அம்பாளை பிரதிஸ்டை செய்ய எண்ணினார். இவர் தற்போதைய ஆலயத்தின் சுற்றுமதில்களுக்குள் வடமேற்கு மூலையில் ஓரு சுண்ணாம்புக் கட்டிடத்தில் கண்ணகை அம்பாளைப் பிரதிஸ்டை செய்தார். அந்தணப் பெருமக்களின் பார்வை இராஜஇராஜேஸ்வரி அம்பாள் பக்கம் இருக்கும் போது கண்ணகை அம்பாளை கிராமமக்களே பூசை செய்து வழிபட்டனர். காலப்போக்கில் கண்ணகை மண்டபம் சிதிலமடைந்துவிட்டது. பழுதுபார்க்கப்படாது இருந்தது. 1960களிலும் பக்தர்கள் அம்மண்டபத்தை சுற்றி வந்து கற்பூரம் ஏற்றி வழிபட்டு வந்தனர்.
1920களில் பெருந்தெருக்கள் திணைக்களத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்த திரு.வேலுப்பிள்ளை பூதப்பிள்ளை என்பவர் சுற்றுமதிலை கட்டுவித்தார். இவர் பெரும்பாலும் சிரமதான பணி மூலமே எல்லா கட்டுமானங்களையும் செய்தார். சுற்றுமதில் கட்டியதன் மூலம் ஆலயத்திற்கு உள் வீதி, வெளி வீதி என இரண்டு வீதிகள் ஏற்படுத்தப்பட்டன. சுற்றுமதிலில் தென்பகுதியில் ஒரு வாசல் உண்டு. அதனூடாக எழுந்தருளி பூசையை உள்வீதியில் நின்றும் தரிசிக்க வசதியாக இருந்தது.
கிழக்கு நோக்கிய அம்பாள் ஆலயத்தில் பிரதான வாசலிற்கு வடக்கில் மணிக்கோபுரமும் அதன் அருகில் வயிரவர் பிரகாரமும் அமைந்திருக்கிறது. மதில்களுக்குள் தென்கிழக்கு மூலையில் மடப்பள்ளி அமைந்திருக்கிறது.
இராஜஇராஜேஸ்வரி அம்பாள் ஆலயம் படிப்படியாக புனரமைக்கப்பட்டு 1965 வரை தூபியுடன் கூடிய ஆதிமூலமும் அதன் முன் மண்டபத்தில் விநாயகபெருமானின் சிலை வலப்பக்கத்திலும் எழுந்தருளும் விக்கிரகம் தெற்கு நோக்கியும் அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு அடுத்த மண்டபத்தில் நந்தியும் அமைந்திருந்தது. எழுந்தருளி பூசையைக் காண்பதற்கேற்றவாறு தெற்கு நோக்கி ஒரு வாசலும் அமைந்திருந்தது
1965வரை ஆலயத்தின் வடகிழக்கு மூலையில் கிழக்கு மதிலில் யாக மண்டபத்திற்கும், வடக்கு மதிலில் வசந்த மண்டபத்திற்கும் பத்திரிப்பு வரை (D.P.C) கட்டப்பட்டு இருந்தது. அதற்கு மேல் கட்டி முடிக்கப்படவில்லை. 1965இன் பின் ஆலயத்தின் உள் வீதியில் தென் மேற்கு மூலையில் புதிதாக விநாயகர் மண்டபம் அமைக்கப்பட்டது. வசந்த மண்டபம் மிகுதி கட்டப்பட்டு பூர்த்தி ஆக்கப்பட்டது. வெளி வீதியில் முன்னர் குறிப்பிடப்பட்டது போல கண்ணகை மண்டபமும் புதிதாக கட்டப்பட்டது.
அக் காலத்தில் வாழ்ந்த திரு.சின்னதம்பி தாமோதிரம்பிள்ளை ஆலய வாசல், பிரதான வீதியில் பல இடங்களிலும், மற்றும் மயானம் போன்ற இடங்களில் அரசு, ஆல் போன்ற மரங்களையூம் ஆலய வீதியில் பூஞ்செடிகளையூம் நட்டு வளர்த்து எடுத்தார். அவை இன்றும் பெரு விருட்சங்களாகவும் பூச்செடிகள் பூத்து குலுங்குவதையும் காணலாம்.
1925ம் ஆண்டு காலப்பகுதியில் ஆலயத்திற்கு செயற்குழு இருக்கவில்லை. திரு. ஆறுமுகம் அப்புக்குட்டி (நெடுவல் மூத்ததம்பி) அவர்கள் தான் ஆலய பூசை ஒழுங்குகளைக் கவனித்து வந்தார். பூசகருக்கு சம்பளம் எதுவும் பணமாகக் கொடுப்பதில்லை. ஊர்ப் பொது மக்கள் பெரும்பாலானோர் விவசாயிகளாதலால் உற்பத்திப் பொருட்களான வெங்காயம், மிளகாய், குரக்கன் போன்றவற்றையே பூசகருக்கு கொடுத்து வந்தனர். இவருக்கு பின்னர் திரு. குமாரு கந்தையா அவர்கள் ஆலய நிர்வாகத்தையும் கவனித்ததுடன் ஆலய பொருட்களையும் தனது பாதுகாப்பில் வைத்து பேணி வந்தார்.
1950களில் தான் முதற் செயற்குழு ஏற்படுத்தப்பட்டது. திரு. அண்ணாமலை வேலாயுதபிள்ளை ஆசிரியர் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட செயற்குழுவில் திரு. செல்லப்பா சின்னத்துரை, திரு.மு. கிருஷ்ணபிள்ளை, திரு.க. கிருஷ்ணபிள்ளை, ஆசிரியர் திரு. சின்னத்தம்பி, ஆசிரியர் திரு.சிவகுருநாதன் சுப்பிரமணியம் போன்றவர்கள் இடம்பெற்றனர். இந்த செயற்குழு ஆலய சித்திரை திருவிழா உபயகாரர்களை மட்டும் கொண்டதாக அமைந்திருந்தது.
இவர்கள் ஆலய திருவிழாவினை நிறைவேற்றுவது பற்றி மட்டுமே தீர்மானித்து சிறப்பாக செயற்பட்டு வந்தனர். திரு.அண்ணாமலை வேலாயுதபிள்ளையின் செயற்குழுவில் ஆசிரியர் திரு.பண்டாரம்பிள்ளை சுப்பையா பின்நாளில் திரு.தாமோதிரம்பிள்ளை சிவபாலசுந்தரம் போன்றவர்கள் இடம்பெற்றிருந்தனர். அதன்பின் 1968ல் திரு.கிருஸ்ணபிள்ளை கனகரத்தினம் உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெற்று வந்தார். அவர் ஆலய செயற்குழுவின் தலைமை பொறுப்பை ஏற்றார்.
1965ம் ஆண்டின் பின்னர் மீண்டும் திரு.வேலுப்பிள்ளை பூதப்பிள்ளை என்பவர் ஆலயத்தின் புனரமைப்பு வேலைகளைச் செய்தார். அப்போது வேறு மண்டபங்களை புதிதாக கட்டுவித்தார். அதன் தொடர்ச்சியாக சிதிலமடைந்திருந்த கண்ணகி மண்டபத்தை சிரமதானம் மூலம் உடைத்து அதில் எடுத்த கற்களை பிள்ளையார் மண்டபம் மற்றும் புதிய கண்ணகை மண்டபம் ஆகியவை கட்டுவதற்கு பயன்படுத்தினார்.
திரு.வே.பூதப்பிள்ளையால் அந்தணப் பெருமக்களதும் வேறும் சில கிராமவாசிகளதும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது அப்போது யாழ்நகரில் பிரபல்யமாக இருந்த இராமகிருஷ்ணா என்ற சிற்பாச்சாரியின் ஆலோசனையின் பேரில் இடத்தையும் தெரிவு செய்து கண்ணகை மண்டபத்தை அமைத்தார்.
சிற்பாச்சாரியின் ஆலோசனையின்படி ஆலயத்தின் சுற்றுமதில்களுக்கு வெளியே வடகிழக்கு மூலையில் அமைத்த அந்த மண்டபத்தை ஆசிரியர் திரு.நாகலிங்கம் இராமலிங்கம் அவர்கள் 1970களில் மெருகூட்டி கட்டுவித்ததுடன்; அம்மன் மண்டபத்துக்கு முன்பாகவே ஒரு கிணற்றையும் தோண்டி கட்டிக் கொடுத்தார். அதன்பின் ஊர்ப்பொது மக்கள் எல்லோரும் வைகாசி விசாகத்தன்று பூரணை நிலவில் தாமே பொங்கலிட்டு படையல் இட்டு வழிபாடும் காட்சி மிகவும் அழகானது. இவ்வாறே கண்ணகை அம்மன் வழிபாடு தொடர்கிறது.
நினைவு கூருகின்றோம் :-
எமது ஆலயத்தினதும் எமது கிராமத்தினதும் நன்மைக்காக அரும்பாடுபட்டு மண்ணொடு மண்ணாக மறைந்து விட்டவர்கள் பலர். அதில் பின்வரும் சிலரையாவது நினைவு கூர்வோம்.
திரு. ஆறுமுகம் அப்புக்குட்டி, திரு. கந்தப்பிள்ளை மூத்ததம்பி, திரு. குமாரு கந்தையா, திரு. சின்னதம்பி வயிரமுத்து, திரு. வேலுப்பிள்ளை பூதப்பிள்ளை, திரு. சின்னதம்பி தாமோதிரம்பிள்ளை, திரு. மூத்ததம்பி சிவசம்பு, திரு. நாகலிங்கம் இராமலிங்கம், திரு. நாகலிங்கம் இராமநாதன், திரு. நாகலிங்கம் அம்பிகைபாகன், திரு. அண்ணாமலை வேலாயுதபிள்ளை, திரு. கிருஸ்ணபிள்ளை கனகரத்தினம், திரு. பண்டாரம்பிள்ளை சுப்பையா, திரு. மு. கிருஸ்ணபிள்ளை, திரு. க. கிருஸ்ணபிள்ளை, திரு. தாமோதிரம்பிள்ளை இராஜரட்ணம், திரு. வ.அம்பலம், திரு. சின்னதம்பி சுப்பிரமணியம், திரு. கந்தையா துரைசிங்கம், திரு. சின்னதம்பி விக்கினேஸ்வரன்.
தொகுப்பு:
திரு.சுப்பிரமணியம் கணேசலிங்கம்
(ஓய்வூ பெற்ற உதவி அதிபர்)



